சென்னை: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நெல்லை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ள நிலையில், பல இடங்களில் பாலத்தை தாண்டி தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்த மீட்பு பணிகளில் ஈடுபட
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 2 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 17 பேரை மீட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே, கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தாமிரபரணியில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள், ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 87.8 அடியாக உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் – பாலத்தின்மீது ஓடும் தண்ணீர்…(வீடியோ)

இன்று காலை முதலே தென் தமிழ்நாடு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி ம லை வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல குற்றாலம் மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் கன்னியாகுமரியின் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் பெருமளவு திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இன்று காலை வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறக்கப்பட்டது. இது தற்போது 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல பெருஞ்சாணி அணையில் இருந்து 1,000 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திறபரப்பு அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் குற்றியார்- மாங்காய் மலை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ள நீர் புகுந்தது.

இதற்கிடையில், குமரியில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால், சுற்றுலாத்தலமான விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை படகு போக்குவரத்து ரத்துசெய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கனமழையால் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி…(வீடியோ)

இன்று காலை முதலே நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. 143 அடி கொள்ளளவு உள்ள பாபநாசம் அணையில், அதிகாலை நிலவரப்படி 125 அடி தண்ணீர் உள்ளது. விநாடிக்கு 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.118 அடி கொள்ளளவு உள்ள மணிமுத்தாறு அணையில், தற்பொழுது 85 அடி தண்ணீர் உள்ளது. இதற்கிடையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை கொட்டி வருவதால், பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், காட்டாற்று வெள்ள நீரும் ஆற்றில் கலக்கும் என்பதால், தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3,000 கன அடிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் தண்ணீர் திறந்த விடப்படும் அளவு படிப்படியாக உயர்த்தி மாலை 4 மணி அளவில் 30 ஆயிரம் கன அடி வரை திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணை தொடர்ந்து கொண்டு, கட்டுப்பாடு மையத்திற்கோ அல்லது 1070 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கோ தெரிவிக்கலாம் எனவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான உதவிக்கு 101 மற்றும் 112 தொலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நேற்றிரவு முதலே பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் முன்செனச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந்துள்ளன.

வெள்ளம்- கனமழை: தென் மாவட்ட மக்கள் வாட்ஸ் அப், டிவிட்டரில் உதவி கோரலாம்! தமிழக அரசு!