சென்னை: கனமழை வெள்ளத்தால் தத்தளித்து வரும் தென்மாவட்ட மக்கள்,  வாட்ஸ் அப்,டடிவிட்டரில் உதவி கோரலாம்  என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி  உள்பட தென்மாவட்டங்களில்  மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் (17ந்தேதி)  இரவு முதல்  தொடர்ந்த பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்கள் பேரிழப்பை எதிர்கொண்டுள்ளதுடன், சாலைகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

தென் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. ஊட்டுவாழ் மடம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மையிலாடி-அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை-தோவாளை சாலை, இறச்சகுளம்-திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடங்கியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீர் காரணமாக வீட்டில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் ரப்பர் குழாய்கள் உதவியுடன் மீட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அங்கு மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் என்றும், இந்த மழை நாளை காலை வரை நீடிக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல பிரபல வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் நேற்று போல கனமழை பெய்யாது, ஆனால்  தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்,  கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்” பதிவுகளில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், : “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.

எனவே  பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும்  நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின்  வாட்ஸ்அப்எண் : 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் எண் : 8148539914
டிவிட்டர்: Username – @tn_rescuerelief, @tnsdma
Facebook id: @tnsdma

ஆகியவற்றின் மூலம் தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் – இந்தியா வானிலை மையம் – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…