பெங்களூரு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டி மோசடி செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போர் எண்ணிக்கையைப் பொறுத்து டி ஆர் பி (TELEVISION RATING POINTS) வழங்கப்படுகிறது.    அந்த டி ஆர் பியை பொறுத்து சேனல்கள் விளம்பரக் கட்டணங்களை முடிவு செய்கின்றன.  இந்த டி ஆர் பி என்பதை பார்வையாளர்கள் ஆராய்ச்சி மையம் நிர்ணயம் செய்கிறது.   ஒரு சில வீடுகளில் பொருத்தப் பட்டுள்ள டி ஆர் பி மீட்டர்கள் மூலமும்  செட் டாப் பாக்ஸ் மூலமும் பலரும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளை தெரிந்துக் கொள்ளும் இந்த மையம் அதைக் கொண்டு டி ஆர் பி ரேட்டிங்கை நிர்ணயம் செய்கிறது.

பெங்களூருவில் ஐந்து பேர் இது குறித்து தவறான டி ஆர் பி மீட்டர் ரீடிங்கை அளித்தும் ஒரே வீடுகளில் நான்கைந்து தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பொருத்தியும் குறிப்பிட சில நிகழ்ச்சிகளுக்கு டி ஆர் பி ரேட்டிங்கை அதிகப் படுத்திக் காடி உள்ளனர்.   அதன் மூலம் அந்த நிகழ்ச்சியின் போது வரும் விளம்பரங்களுக்கு சேனல்கள் அதிகக் கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.

இதையொட்டி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் ராஜு, மாது, சுரேஷ், ஜெம்சி மற்றும் சுபாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.    சட்ட பூர்வமற்ற தவறான முறைகளின் மூலம் குறிப்பிட்ட சில சேனல்களில் உள்ள சில நிகழ்ச்சிகளை அதிகம் பிரபலம் உள்ளதாக இவர்கள் காட்டி உள்ளனர்.   அதற்காக அந்த சேனல்கள் இவர்களுக்கு பெரிய தொகையை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காவல் துறையினர் கைது செய்த ஐவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.