ராமேஷ்வரம்,

லங்கை கடற்படையால் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத வரை உடலை வாங்க மாட்டோம் என துப்பாக்கி சூட்டில் இறந்த பிரிட்ஜோவின் உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நேற்று இரவு தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் பலியாகிவிட்டார்.

இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது,

‘இந்தியக் கடல் எல்லையில் நாம் மீன் பிடித்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே இலங்கைக் கடற்படை செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஆதரவாகவே இந்திய கடற்படையும் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இந்திய மீனவர் பிரிட்ஜோவின் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில், கடலோரக் காவல்படையின் உதவியைக் கேட்டு அவர்களைத் தொடர்பு கொண்ட மீனவர்களுக்கு, இந்திய கடற்படை  எந்த உதவியும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுபோன்ற கொடுமையான  செயல்களை தடுத்து நிறுத்த முன்வராமல், தமிழர்களை  போராட்டக் களத்தில் வைத்திருக்கவே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள் என்று கூறினார்.

தமிழகத்தில்,சேலம்  உருக்காலை, காவிரி நீர், ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன், தாமிரபரணி என நீண்டு, இப்போது மீனவன் மரணத்தில் வந்து நிற்கிறது. நெடுவாசல் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, மீனவன் மரணத்தை நோக்கி அரசியல் கட்சிகள் ஓடுகின்றன. நமது உயிரையும் உடமையையும் இந்த அரசு காப்பாற்றும் என்ற எண்ணம் மக்களிடம் நீர்த்துப்போய் கொண்டிருக்கிறது என்றார்.

மேலும், “தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஏதேனும் ஒரு பிரச்னைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் இல்லாத நாளே இல்லை என்றாகிவிட்டது.

மக்களுக்காகப் போராடுகிறவர்களை, ‘தேசவிரோதிகள், பயங்கரவாதிகள்’ என பா.ஜ.க நிர்வாகிகள் அழைக்கின்றனர்.

‘ஹைட்ரோ கார்பன் வேண்டாம்’ என்பவர்கள் தேச விரோதிகள் என்றால், நடுக்கடலில் மீனவனைச் சுட்டுக் கொன்ற சிங்கள கடற்படையை என்ன பெயர் சொல்லி அழைப்பது? மீனவ மக்களின் துயரம் பல ஆண்டுக்கால மாக நீடித்து வருகிறது.

இவற்றில் இருந்து மீனவ மக்களைக் காப்பாற்றுவதற்கு மத்தியில் ஆளும் அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசியாவின் மிகப் பெரிய துணைக் கண்டமாகக் காட்சியளிக்கிறோம். மிகப் பெரிய கப்பற் படையைக் கையில் வைத்திருக்கிறோம்.

ஆனாலும், நமது மீனவர்களைக் காப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இவர்கள் யாரைக் காப்பாற்றுவதற்கு இந்தியக் கடல் எல்லையில் நங்கூரமிட்டுக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. இந்திய மீனவர்களின் 150 படகுகளை இலங்கை அரசு சிறைப்பிடித்து, அரசுடைமை ஆக்கிவிட்டது.

இதில், ஒரு படகின் விலை முப்பது லட்ச ரூபாய். படகுக்குச் சொந்தக்காரனான பெரியவர் கண்ணீரோடு அழுகிறார்.

அந்தப் படகுகளை மீட்டுக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? அதேநேரம், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போர்க் கப்பலை இலங்கைக்குப் பரிசாகக் கொடுக்கிறது இந்தியா. அந்த ராணுவ வீரர்களுக்கு, தர மேம்பாட்டுப் பயிற்சியும் அளித்தனர். ஆனால், மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் அக்கறை காட்டுவதில்லை.

கேரள மீனவர்கள் இரண்டு பேரை, இத்தாலி கடற்படையினர் சுட்டுக் கொன்றதற்காக நாடாளுமன்றத்தில் தொடர் விவாதம் நடைபெற்றது.

இத்தாலி கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிப்பது வரையில் விவாதித்தார்கள். ஆனால், ராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து எந்த விவாதமும் எழுப்பப்படுவதில்லை.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதைக் கண்டிப்பதில்லை. இலங்கை அரசுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பிரதமர் கூறுவதில்லை.

ஆனால், கோதாவரியில் புனித நீராடும்போது விபத்து ஏற்பட்டால் பிரதமர் வருத்தம் தெரிவிப்பார். வாரணாசியில் பாலம் சரிந்து விழுந்தால் உடனே இரங்கல் தெரிவிப்பார். சிலையைத் திறப்பதற்குத் தனி விமானத்தில் வந்து உடுக்கை அடிப்பார். மீனவனைக் கொன்றால், அதைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள மறுக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இதேபோன்ற சம்பவம் பீகாரிலோ உத்தரப்பிரதேசத்திலோ நடந்திருந்தால், அமைதியாக இருந்திருப்பாரா?

இந்தியப் பெருங்கடலில் நாம் மீன் பிடிக்கச் செல்வதை இலங்கை அரசு விரும்பவில்லை. இதே நிலை நீடித்தால், நாம் எங்கே சென்று வாழ்வது? இந்தத் தமிழ் மண்ணில் நாம் வாழ்வதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா?

மீன் பிடிக்க முடியாமல் மீனவன் ஓடிப்போக வேண்டும்.  விவசாயம் செய்ய முடியாமல் வேறு தொழில்களுக்கு விவசாயி ஓடிவிட வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்தும் நடத்தப்படுகிறது.

மீன் பிடிக்கச் சென்றுவிட்டு, உயிரோடு திரும்புவோமா இல்லையா என்ற அச்சத்தை நாள்தோறும் விதைக்கிறார்கள்.

‘இனி இதுபோன்ற செயல்கள் தொடரக் கூடாது’ என மத்திய அரசு இலங்கையை எச்சரித்ததாக எங்கும் செய்திகள் இல்லை. தைவான் நாட்டில் ஒரு மீனவனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.

இதனால் கொந்தளித்த பிலிப்பைன்ஸ் நாடு, கடற்படை எங்கும் ராணுவத்தை நிறுத்தி போர் தொடுக்க ஆயத்தமாகிவிட்டது.

விபரீதத்தை உணர்ந்து பயந்துபோன தைவான் அதிபர், கணவனை இழந்த அந்த ஏழைப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பிறகுதான் படையைத் திரும்பப் பெற்றது பிலிப்பைன்ஸ்.

இந்த உணர்வில் சிறிதளவாவது பிரதமருக்கு இருக்கிறதா?

இதுவரையில் 800 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக, நாடாளுமன்றத்திலேயே அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பேசிப் பதிவு செய்துள்ளன.

தாமிரபரணி, ஹைட்ரோ கார்பன் எனப் போராட்டம் வெடிக்கும்போது, விவகாரத்தை வேறு திசைக்கு மடை மாற்றுகிறார்கள்.

நெடுவாசல் கூட்டத்தை ராமேஸ்வரத்துக்குத் திருப்பியுள்ளனர்.

‘இவ்வளவு பெரிய ராணுவம் நம்மைப் பாதுகாக்கும்’ என இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நம்ப முடியும்?”

இவ்வாறு அவர் கூறினார்.