புதுடெல்லி: உலகிலேயே மீன் உற்பத்தியில் (மீன் பிடித்தல்) இரண்டாம் இடம் வகிக்கும் நாடாக இந்தியா திகழ்வதாக இந்திய மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

அத்துறையின் அறிக்கை கூறுவதாவது; மீன்வளத்துறையின் கணக்கின்படி, உலக அளவிலான மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 6.3% ஆகும். மேலும், இந்த உற்பத்தியின் வளர்ச்சி 7% ஐ தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 14.5 மில்லியன் மீனவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தியப் பிரத்யேக பொருளாதார (கடல்)மண்டலத்தில், உணவுக்கான மீன்கள் அதிகம் பிடிக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. இந்தப் பொருளாதார மண்டலத்தின் 30% பகுதிகள், அந்தமான் – நிகோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவற்றை சுற்றியப் பகுதிகளில் அடங்கியிருக்கும் சூழலில், இவற்றில் உணவு மீன்கள் பிடிக்கப்படும் அளவு 1% மட்டுமே.

இந்தியாவைப் பொறுத்தவரை மீன் உற்பத்தி துறை என்பது நன்கு வளர்ந்துவரும் ஒன்றாகும். உணவு மீன்களுக்கான உலகளாவிய சந்தையின் மதிப்பு 11.38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கடந்த 2017ம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது. அந்த மதிப்பு வரும் 2023ம் ஆண்டு 13.75 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று மதிப்பிடப்படுகிறது.