பெங்களூரு: ஐ மானிட்டரி அட்வைஸரி (ஐஎம்ஏ) என்ற அமைப்பின் தலைவர் முகமது மன்சூர், வளைகுடாப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டதையடுத்து, அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ மானிட்டரி அட்வைஸரி என்ற நிறுவனங்களின் குழுமத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகைக்கேற்ப ஒவ்வொரு மாதமும் 2% முதல் 3% வரை வட்டி கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதி தரப்பட்டது. இஸ்லாமிய வங்கி விதிமுறையில் அடிப்படையில் இந்த நிறுவனம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டதால், குறிப்பாக, அந்த மதத்தைப் பின்பற்றும் பல சாமானிய மற்றும் நடுத்தர மக்களை இது பெரிதும் கவர்ந்தது.

இந்த நிறுவனங்களின் குழுமத்தை துவங்கிய முகமது மன்சூர், வளைகுடா பகுதியிலிருந்து பெங்களூருக்கு வந்தவர். பெங்களூரு நகரின் நடுத்தர வர்க்கத்தினர் பலர் இவரின் குழுமத்தை நம்பி தாங்கள் உழைத்து சேமித்தப் பணத்தைப் போட்டனர்.

ஆனால், தற்போது கடும் நிதி நெருக்கடியில் அந்த குழுமம் சிக்கிக்கொண்டதால், அதன் நிறுவனர் மீண்டும் வளைகுடாப் பகுதிக்கே தப்பிச் சென்றுவிட்டார்.

அதற்கு முன்னர், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய ஒரு ஆடியோ பதிவில், கர்நாடகாவின் பல முக்கிய அரசியல்வாதிகள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், சிவாஜிநகர் சட்டமன்ற உறுப்பினர் ரோஷன் பெய்க், தன்னிடம் ரூ.400 கோடியைப் பெற்றுவிட்டு அதை திருப்பித் தர மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ள அவர், இந்த நிதி நெருக்கடியால் தன் வாழ்வை முடித்துக்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.