அகமதாபாத்

ஐசிஏஐ அகமதாபாத் குழுவில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்  பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிஏஐ என்னும் இந்தியன் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இந்த அமைப்பில் மொத்தமுள்ள 10000 உறுப்பினர்களில் அகமதாபாத் பிரிவில் மட்டும் 2500 பேர் உள்ளனர். நாட்டில் உள்ள பிரிவுகளில்  உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அகமதாபாத் பிரிவு இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த அகமதாபாத் பிரிவில் குழு உறுப்பினர் தேர்தலில் முதல் முறையாக   அஞ்சலி சோக்சி என்னும் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் நின்றவர்களில் இரண்டாவது அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளார். இந்த பிரிவு ஆரம்பித்து 18 வருடங்களில் குழு உறுப்பினராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

தற்போது பொருளாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள அஞ்சலி சோக்சி, “நான் இந்த பிரிவில் உள்ள பெண்கள் நலனுக்காக பாடுபட எண்ணி உள்ளேன். ஏற்கனவே பெண்களுக்கு என குழுக்கள் இருந்த போதிலும் பொதுக் குழுவின் முதல் பெண் உறுப்பினர் என்ற முறையில் நான் பெண்களின் தனித்துவ ஆற்றலை வெளிப்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்த எண்ணி உள்ளேன்.

சார்டர்ட் அக்கவுண்டண்ட் ஆக தேர்வு பெற்றவர் யாராக இருந்தாலும் ஐசிஏஐ பிரிவுகளில் சேர முடியும் என்பதை நான் அறிவேன். ஆனால் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டதால் எனது கடமைகள் அதிகரித்துள்ளன. நான் இந்த கடமைகளை செய்வதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்பதையும் நான் அறிவேன்.” என தெரிவித்துள்ளார்.