அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்புமாற்று சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்திருக்கிறார்கள்.

இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், பன்றி உள்ளிட்ட உயிரினங்களில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளை பயன்படுத்த கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை மூளைச்சாவடைந்த ஒருவருக்கு பொருத்தியதில், அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதுடன், சிறுநீரையும் கிரியேட்டினையும் பிரித்து வெளியேற்றியது.

மனிதனின் ரத்தநாளங்களுடன் பன்றியின் உறுப்பை பொருத்துவதில் மருத்துவர்களுக்கு சில சிக்கல் ஏற்பட்டதையடுத்து வயிற்றுக்கு வெளியே தொடையின் மேல் பகுதியில் அந்த சிறுநீரகத்தைப் பொருத்தி பரிசோதிக்கப்பட்டது.

54 மணி நேரம் மட்டுமே நீடித்த இந்த சோதனை, மனிதனுக்கு முறையாக பொருத்தும் போது ஏற்படும் நீண்டகால விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும், இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி உறுப்புமாற்று மருத்துவத்துவ சிகிச்சையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.