டில்லி

தார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் டிசம்பர் 1 முதல் ரேகைப் பதிவு தேவை இல்லை என ஆதார் அறிவித்துள்ளது.

அரசு ஆதார் எண்ணை மொபைல், வங்கிக் கணக்குகள் ஆகியவைகளுடன் அவசியம் இணைத்தாக வேண்டும் என கூறி உள்ளது.   அதே நேரத்தில் ஆதாரை அவசியம் என அரசு சொல்லுவது செல்லுபடி ஆகுமா என்னும் வழக்கில் தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.   மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க தற்போது ரேகைப் பதிவு அவசியம் எனவும் கூறப்படுகிறது.

ரேகைப் பதிவு செய்வதின் மூலம் ஆதாரில் அளிக்கப்பட்ட அனைத்து விவரங்களும் மொபைல் ஆபரேட்டர்களுக்கும் கிடைக்கும் என்பதால் அதை இணைக்க எதிர்ப்பு கிளம்பியது.  இந்நிலையில் ஆதார் நிறுவனம் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதன் படி ஆதாரில் அளிக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு அனுப்பபடும் ஒருமுறை உபயோகப்படுத்தக் கூடிய பாஸ்வர்ட் மூலம் ஆதாரை இணைக்கலாம் என அறிவித்துள்ளது.  இந்த முறை வரும் டிசம்பர் 1 முதல் அமுலுக்கு வருவதால் அதுவரை பொறுமையாக இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

இதன் மூலம் பல முதியோர்களும், நடக்க இயலாதவர்களும் தங்கள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் சுலபமாக இணைக்க உதவும்.   அத்துடன் புதிய சிம் வாங்குபவர்கள் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் எனவும், பழைய மொபைல் எண்ணுடன் புதிய எண்ணை இணைக்க 2018ஆம் வருடம் ஃபிப்ரவரி  ஆறாம் தேதி கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உச்சநீதிமன்றம் நேர்மாறான கருத்தை வெளியிட்டுள்ளது.

வங்கிகளும், மொபைல் ஆப்பரேட்டர்களும் அவசியம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் அப்படி இணைக்கவில்லை எனில் கணக்குகள் நீக்கப்படும் எனவும் எந்த தகவலும் அனுப்பி வாடிக்கையாளர்களை பயமுறுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஆதார் எண்ணை மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது.   ஏற்கனவே அரசியல் சாசன அமர்வுக்கு ஆதார் வழக்குகள் மாற்றப்பட்டுள்ளதால் அந்த சாசன அமர்வு இது குறித்து உத்தரவுகள் வழங்கும் என தெரிவித்துள்ளது.