டெல்லி: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் முறைப்படுத்தப்படும், 50% இடங்களுக்கு அரசுக் கல்லூரிக் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் (என். எம். சி)(National Medical Commission) என்பது 33 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மருத்துவத் துறையின் ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் செயலை மேற்கொள்கிறது.

இந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில், தேசிய மருத்துவ ஆணையம் சட்டம் 2019ன் படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான மருத்துவ கட்டணம் முறைப்படுத்துவது தொடர்பான  விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்   சேரும் மாணாக்கர்களில்  50% இடங்களுக்கு, அரசுக் கல்லூரிகளிலும் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இது அனைத்து மாநிங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.