டெல்லி: கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என  மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்டு உள்பட 3 தடுப்புகள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்து உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு மத்தியஅரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அதுபோல, இந்திய நிறுவனமான சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனமும் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளதும், அதற்கு விரைவில் மத்தியஅரசு அனுமதி வழங்கும் என்று தகவல்கள் பரவி வருவதும்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, மத்தியஅரசின் நடவடிககைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்தியர்களை கினியா பன்றிகளாக மாற்றிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா தடுப்பூசியின்  பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பான வதந்திகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசி ஒப்புதல் வழங்குவதில், எந்தவித சமரசமும் கிடையாது, அதற்கான நெறிமுறைகளின்படியே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி  தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தவர்,  ஏற்கனவே போலியோ நோய்த்தடுப்பு மருந்துகளின் போது பல்வேறு வகையான வதந்திகள் பரவின, ஆனால் மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.  இந்தியா இப்போது போலியோ இல்லாத நாடாக உருவெடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியவர்,  தடுப்பூசிக்கான வழிகாட்டுதல்களின்படியே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்கள் கினியா பன்றிகளா? அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு…