டெல்லி:  மத்தியஅரசு  அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த என காட்டமாக விமர்சித்து உள்ளார்.

அவசரகால பயன்பாட்டிற்காக கூட அஸ்ட்ராஜெனெகாவை உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்காத நிலையில்,  இந்தியர்கள் கினியாப் பன்றிகளாக இருக்கப் போகிறார்களா? என கேள்வி எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க உலகம் முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. பல நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவன தடுப்பூசிதான் 92 சதவிகித வெற்றியை தந்துள்ளதாகவும், அதைத்தொடர்ந்து பைசர் நிறுவன தடுப்பூசி 82 சதவிகிதம் வெற்றியை தருவதாகவும், ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் அஸ்ராஜெனெகா நிறுவன தடுப்பூசி  70சதவிகித வெற்றியைத்தான் தருவதாகவும் ஆய்வு  கள் தெரிவித்துள்ளன. 

இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்–டி தடுப்பூசி, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கிறது. அதுபோல, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்கும் தடுப்பூசி சோதனையும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இந்த நிறுவனங்கள்  தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க ஒப்புதல் கோரி மத்தியஅரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு தடுப்பூசிக்கும் மத்தியஅரசு அனுமதி வழங்கவில்லை. விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சீரம் நிறுவனம் தனது விண்ணப்பத்தில், ‘‘பாதுகாப்பை பொறுத்தமட்டில் கோவிஷீல்டு, நல்ல சகிப்புத்திறன் கொண்டது, எதிர்வினைகளில் பெரும்பாலானவை லேசானவை, எந்தவித நீடிப்பும் இன்றி தீர்க்கப்பட்டவை. எனவே கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது, கொரோனாவை தடுப்பதற்கு திறம்பட பயன்படுத்தப்படலாம்’’ என கூறி உள்ளது.

இந்த நிலையில்,  அஸ்ட்ரா ஜெனேகா  தடுப்பூசியான கோவிஷீல்டு  இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி  கடும் எதிர்ப்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்,.

அதில், அஸ்ட்ரா ஜெனேகா  தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமே (WHO)  இதுவரை அனுமதி வழங்காத  நிலையில்,  இந்தியாவில், அந்நிறுவன தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளதுடன், இந்தியர்கள் என்ன பரிசோதனை கினியா பன்றிகளா ? என காட்டமாக எழுப்பி உள்ளார்.

சுப்பிரமணியன்சுவாமியின் இந்த போர்க்கொடி பாஜக அரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.