சென்னை:

நாளை கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ள நிலையிலும், வரும் 21ந்தேதி முதல் தனது அரசியல் பிரவேசம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன் இன்று வழக்கறிஞர்கள் மற்றும் நற்பணி மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் நற்பணி இயக்கத்தினருடன் கமல்ஹாசன் திடீர் ஆலேசானை மேற்கொண்டார்.

நாளை தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ள நிலையில், இன்றைய கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன் வரும் 21ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து விட்டு அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

அன்று மாலை மதுரையில் நடைபெற உள்ள  பொதுக்கூட்டத்தில்,   கமலஹாசன் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகள் குறித்து அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தனது முதல் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பும் கமல், அதற்கான பணிகளை இப்போதே தொடங்கி உள்ளார்.

மதுரை கூட்டத்தில் வரலாறு காணாத அளவில் மக்கள் திரள வேண்டும் என்றும்,   தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை  மதுரைக்கு அழைத்து வருவது குறித்தும், அதற்கு அரசு தடை விதித்தால் அதை எதிர்கொள்வது குறித்தும் தனது வழக்கறிஞர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், இன்றைய கூட்டத்தின்போது, கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ள நிர்வாகிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், கட்சியின் பெயரை இதுவரை வெளியே தெரியாத நிலையில், நாளை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட வேண்டிய நிலையில், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் விவாதித்ததாகவும்  கூறப்படுகிறது.