டில்லி

வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கட்டுப்பாட்டு விதிகளால் மருத்துவமனைகளுக்கு  கொரோனாவுக்கான உதவிகள் உடனடியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கான மருத்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் தேவையும் அதிகரித்து வருகின்றன.  எனவே வெளிநாடுகளில் இருந்து இவை உடனடியாக இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா உள்ளது.   இதையொட்டி இந்திய அரசு மே மாதம் 3 ஆம் தேதி ஒரு உத்தரவை வெளியிட்டது.

அந்த உத்தரவின்படி கொரோனா தொற்று த்டுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யும்  போதும் இலவசமாகப் பெறும்போதும் அவற்றுக்கு ஜி எஸ் டி விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.  இதனால் பல கொரோனா நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   ஆயினும் இந்த உதவிகள் உடனடியாக கிடைக்காத என தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் வெளிநாட்டு நிதி கட்டுப்பாட்டு விதிகளின்படி இந்த நிதிகள் மற்றும் அன்பளிப்புகள் அனைத்தும் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு இங்குள்ளவர்கள் அதனைப் பெற முடியும் என்பது சட்டமாகும்.   தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன், மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்ற கருவிகளை வெளிநாட்டில் உள்ளோர் இலவசமாக இந்தியாவுக்கு அனுப்புகின்றனர்.

இவற்றுக்கு அரசின் உத்தரவுப்படி ஜிஎஸ்டி செலுத்தத் தேவை இல்லை.  ஆனால் மத்திய அரசின் அனுமதி பெற்ற பிறகே இவற்றை குறிப்பிட்ட மருத்துவமனைகள் மற்றும் அமைப்புக்கள் ஏற்க முடியும்.  இதனால் பல பொருட்கள் தேவையான நேரத்தில் கிடைக்காமல் தாமதம் உண்டாவதாகப் பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையொட்டி ”வெளிநாட்டு நிதி உதவி விதிகளில் இந்திய அரசால் வரி விலக்கு செய்யப்பட்ட பொருட்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.    மேலும் இந்த பொருட்களை வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்வோருக்கு இது குறித்த சான்றிதழ்களை அவர்கள் விண்ணப்பித்த உடன் அளிக்க வேண்டும். ” என தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.