டெல்லி நோக்கி பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் பஞ்சாப், ஹரியானா, உ.பி. எல்லையில் உள்ள விவசாயிகள் மார்ச் 6 ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் பேரணி மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறுவதை தடுக்க ஷம்பு மற்றும் கானௌரி எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதனால் டிராக்டர்கள் மூலம் முன்னேறுவதை நிறுத்திவிட்டு ரயில்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், கார்கள் உள்ளிட்ட மாற்று வழிகளில் டெல்லியை அடைய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

மார்ச் 14ம் தேதி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் பேரணி நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ள நிலையில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுப்பெருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் வரும் விவசாயிகளை அடையாளம் கண்டு கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெளிமாநில விவசாயிகள் தங்கியுள்ள இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியை நோக்கி முன்னேறிவரும் விவசாயிகள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வீட்டை முற்றுகையிடலாம் என்ற உளவுத்துறை தகவலை அடுத்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வீடுகள் முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை (மார்ச் 10) நான்கு மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.