சென்னை: நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் விவசாயிகள், வேளாண் நிறுவனங்கள் தங்களின் மேலான  கருத்துக்களை தெரிவிக்கலாம் என வேளாண்துறை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக கடந்தஆண்டு (2021) பதவி ஏற்றதும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக, வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட் போடப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்தஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடப்பாண்டிரும்,  2022–-23–ம் ஆண்டிற்காக தனி  வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறிய  உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மைத் தொழிலில் பங்குபெற்றுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களைப் கேட்டு, பயிர் சாகுபடியுடன், உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட இருப்பதால்,  வேளாண் சார்ந்த பொதுமக்கள், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில், வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், வேளாண் வர்த்தகர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள், வேளாண் தொழில் சார்ந்த கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளவர், இதுபோன்று, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் வகையில், மாநிலத்தில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் விரைவில் நடத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.

இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெறுவதற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன. மேலும்,  வேளாண் சார்ந்த பொதுமக்கள் அரசுக்குக் கடிதம் அல்லது மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் ஆப் தொலைபேசி எண் அல்லது இதர சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று கூறியதுடன், அதற்கான முகவரிகளையும் அறிவித்தார்.

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை – உழவர் நலத்துறை, தலைமைச் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை. மின்னஞ்சல் முகவரி agrisec@tn.gov.in அல்லது agrips@tn.gov.in வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி: 93848 76300. டிவிட்டர் மூலம் தெரிவிப்பதற்கு @ agridept_tn, ‘உழவன் ஆப்’-இல் “பட்ஜெட் கருத்துக்கள்” என்ற சேவையின் கீழ் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.