விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது திருவிருந்தாள்புரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கு ஜெயதுர்கா(10), ஜெயலெட்சுமி(7) என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். இவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறுகள் நடைபெற்று வருவது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்த நிலையில், சுந்தரவடிவேலு பூங்கொடி இடையே நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தீவிரமான நிலையில், கடும் கோபமடைந்த சுந்தரவடிவேலு, தனது மனைவி பூங்கொடி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இதன் பின்னர் வெட்டி அரிவாளுடன் காவல் நிலையத்திற்கு சென்ற சுந்தரவேலு, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக்கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது சுந்தரவேலுவின் மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வீட்டில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சுந்தரவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் மாவட்ட எஸ்பி கண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். குடும்பத்தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.