பிஹார்:
பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருப்பவர் சுதிர் குமார் சவுத்ரி. இவர், பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள நகரக் காவல் நிலையத்தில் பணியிலிருந்த அதிகாரியால் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது சகோதரர் கிஷன் குமாரை காவல்துறை கைது செய்ததை அறிந்த சுதிர் குமார் காவல் நிலையம் சென்ற போது அங்கு பணியிலிருந்த அதிகாரிகள் தன்னை தாக்கியதாக சுதிர் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது சகோதரனை காவல்துறை கைது செய்ததை அறிந்ததும், இதுகுறித்து விசாரிக்க அங்குச் சென்றேன். லாக்-அப்பில் இருந்த எனது சகோதரனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ​​அங்கு வந்த பணியில் இருந்த அதிகாரி, என்னைக் கடுமையாகத் தாக்கினார். மேலும் என்னைக் கால்களாலும் உதைத்தார். தொடர்ந்து, அவர் என்னைக் காவல் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். மேலும் அவர் எனக்கும் எனது சகோதரருக்கும் எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்” என்று கூறினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, நான் அப்பகுதி எஸ்.டி.பி.ஓ., ராம் நரேஷ் பாஸ்வானிடம் தெரிவித்தேன். அவரும்  இதுகுறித்து முறையான விசாரணை செய்வதாக உறுதி யளித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே முசாபர்பூர் காவல் நிலையத்தின் திறப்பு விழாவிற்குத் தன்னை அழைத்ததாகவும் சுதிர் குமார் சுட்டிக்காட்டினார்.
அப்போது, ​​அவர்கள் என்னை ஒரு பிரபலமாக நடத்தினார்கள். நான் திறந்து வைத்த அதே காவல்நிலையத்தின் காவலர்கள் என்னை அவமானப்படுத்தியது மட்டுமின்றி, என்னை அடித்து நொறுக்கியது மிகவும் வருத்தமளிக்கிறது. இது சாமானியர்களிடம் காவல்துறையின் அணுகுமுறையைக் காட்டுகிறது” என்றும் கூறினார்.
நிலம் விற்பனை செய்த வழக்கில் கிரிஷன் குமார் கைது செய்யப்பட்டார். இரண்டு நபர்களுக்கு இடையே சர்ச்சைக்குரிய நில பேரம் நடந்ததற்கு அவர் சாட்சியாக இருந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.