டெல்லி: மத்திய அரசுடனான விவசாய சங்கங்களின் பேச்சுவார்த்தை தோல்வி அடைநத நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 3ந்தேதி (நாளை) மீண்டும் நடைபெறும் என விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது.

வேளாண் சடங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 7வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை தடுக்கும் வகையில், விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது.  நேற்றைய பேச்சுவார்த்தையில்,  பஞ்சாப்பில் இருந்து 32 விவசாயிகள் சங்கங்களும், அரியானாவைச் சேர்ந்த 2 விவசாயிகள் பிரதிநிதிகளும் ஏ.ஐ.கே.எஸ்.சி.சி தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயிகள் தலைவர் ஆகியோர்  பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தலைவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவில்லாமல் தொடர்ந்தது.

பேச்சுவார்த்தை தொடங்கும் முன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அனைத்துச் சிக்கல்களையும் பேசித் தீர்வு காண அரசு தயாராக இருக்கிறது. விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கையைக் கேட்டபின் தீர்வு காணப்படும்’ எனத் தெரிவித்தார்.

35 விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சாத்தியமில்லாதது. சிறிய குழுக்களாக இருந்தால்தான் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  ஆனால், விவசாயிகள் சங்கத்தினரோ நாங்கள் மொத்தமாகத்தான் வருவோம். தனித்தனிக் குழுவாகப் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்றும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தைக்குட்பட்டது என்று விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தின.

ஆனால், அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, மீண்டும் டிசம்பர் 3ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்துக்கு பின் பாரத் கிஷான் யூனியன் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ராஹன் கூறுகையில், ‘மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை முழுமையடையவில்லை. எங்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க 5 நபர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைப்பதாகக் கூறியது அதை நிராகரித்துவிட்டோம். டிசம்பர் 3-ம் தேதி மற்றொரு கூட்டத்தில் சந்திப்போம்’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் “கூட்டம் நன்றாக இருந்தது, மீண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் சார்பாக பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் விவசாயிகள் தலைவர்கள் பேச்சுவார்த்தை அனைவருடனும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினர், எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார்.