மும்பை

கோவாவில் இருந்து மகாராஷ்டிரா வரும் பயணிகள் கொரோனா சோதனையைத் தவிர்க்க கர்நாடகா வழியாக வருகின்றனர்.

Representing picture

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.   இந்தியாவில் அதிக அளவில் பாதிப்படைந்துள்ள இம்மாநிலத்தில் இதுவரை 18.29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி மகாராஷ்டிர அரசு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டில்லி, ராஜஸ்தான், குஜராத், மற்றும் கோவாவில் இருந்து வருவோர் தங்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழை விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மாநில எல்லைகளில் கட்டாயம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  அப்படி இல்லை எனில் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆணை இடப்பட்டுள்ளது.

இந்த சோதனையை தவிர்க்கக் கோவாவில் இருந்து வருவோர் பெலகாவி, ஹுப்பளி, மற்றும் மங்களூரு வரை சாலை வழியில் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மும்பை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கின்றனர்.  அவர்கள் நேரடியாகக் கோவாவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு விமானம் மூலம் சென்றால் கொரோனா பரிசோதனை அவசியம் என்பதற்காக இந்த முறையைக் கையாள்கின்றனர்.

இது குறித்து ஹுப்பளி விமான நிலைய இயக்குநர் பிரமோத் குமார், “நாங்கள் விமான பயணிகள் எங்கிருந்து வருகின்றனர் என்பது குறித்து இதுவரை விவரங்கள் சேகரிக்கவில்லை.  ஆனால் தற்போது மகாராஷ்டிரா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் விவரங்கள் சேகரிப்பது அவசியமாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  கடந்த சில நாட்களாக இந்த விமானங்கள் முழுமையாக நிரம்பி வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.