சென்னை,

திமுக தலைவரும்,  5 முறை முதல்வர் என்ற பெருமை பெற்ற கருணாநிதி தற்போது உடல்நல மில்லாமல் இருப்பதால் சட்டப்பேரவை கூட்டங்களில் பங்குபெற முடியாத நிலையில் இருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை பேரவைக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்பது சட்டமன்ற விதிமுறை.

எனவே, தொடர்ந்து 6 மாதத்திற்கும் மேலாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கும் கருணாநிதிக்கு, விதியில் இருந்து விலக்கு கோரி பேரவையில் திமுக தீர்மானம் கொண்டுவந்தது.

உடல்நிலையால் கருணாநிதி பேரவைக்கு வர விலக்கு கோரும் தீர்மானத்தை திமுக செயல்தலை வரும், எதிர்க்கட்சி தலைவருமான  ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் வழி மொழிந்தார்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தினார். அதையடுத்து  தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இதையடுத்து  சட்டமன்ற உறுப்பினர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை பேரவைக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து கருணாநிதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது

திமுக தலைவர் கருணாநிதி 5 முறை முதல்வர் என்ற பெருமை பெற்றதோடு தற்போது எம்எல்ஏவாக வைரவிழா கண்டுள்ளார்.  அவர் எம்எல்ஏவாக பதவியேற்று இன்றுடன் 60 ஆண்டுகளை கடந்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் மிக மூத்த அரசியல்வாதி. கலை, இலக்கியம், எழுத்தாற்றல், பேச்சாற்றல் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். அரசியலில் பல தலைமுறை பிரதமர், முதல்வர்களை கண்டவர் என்ற பெருமைக்குறியவர் கருணாநிதி.