டில்லி

டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் தமிழ்நாட்டில் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.  இவரது தாத்தா சுப்பராயன் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை மாகாண முதல்வராகவும் தந்தை மோகன் குமாரமங்கலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.   காங்கிரஸ் மற்றும் பாஜக அமைச்சரவையில் ரங்கராஜன் குமாரமங்கலம் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.

ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டில்லியில் வசந்த விகார் பகுதியில் வசித்து வருகிறார்.   சுமார் 68 வயதாகும் இவர் வழக்கறிஞர் ஆவார்.  இவர் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.    நேற்று இரவு அவர் வீட்டில் துணை துவைப்பவர் தனது இரு உதவியாளர்களுடன் இணைந்து கொள்ளை அடிக்க முயன்ற போது இந்த கொலையைச் செய்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இதையொட்டி துணி துவைப்பவரான ராஜு லக்கான் என்னும் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவருடைய கூட்டாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  ரங்கராஜன் குமாரமங்கலம் மற்றும் கிட்டி தம்பதியினரின் மகன் மோகன் குமாரமங்கலம் தமிழக காங்கிரஸ் செயல் தலைவராகப் பதவி வகிக்கிறார்.