நாகர்கோவில்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெங்களூரு சென்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாகப் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  மொத்தம் 26 கட்சிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் ஒருவர் ஆவார்.

இதையொட்டி மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,

”தமிழக விவசாயிகள் காவிரி நீரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் நீரை கூட முழுமையாக தடுக்க புதிய அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநிலம் சென்று, அணை கட்ட முயற்சி எடுக்கும் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோருடன் கை குலுக்கிக் கொண்டு, சோனியா காந்தி கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். இது வெந்து போன விவசாயி இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல இருக்கிறது.

எனவே தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா சென்றது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்க்கட்சி கூட்டணிக்காகச் சென்றாக கருதவில்லை. விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன். இது தமிழகத்துக்கான கேடு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அங்குச் சென்று இருக்கலாம். ஆனால் 8 கோடி மக்களின் முதல்-அமைச்சராகச் சென்று கைகுலுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

மேகதாதுவில் அணை கட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியைத் தந்தால் மட்டுமே கூட்டணியில் கைகோர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வாக்குறுதியை பெறவில்லை. அதனால் தான் இன்றைய தினத்தைத் துக்க தினமாக அனுசரித்து கருப்பு பட்டை அணிந்து இருக்கிறோம். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள். யார் தண்ணீர் தரவில்லை என்றாலும் தவறுதான்.”

என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.