சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, 2 நாள் விசாரணைகள் நடத்ரதப்பட்ட நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசினார்.

கடந்த திமுக ஆட்சியின்போது, 2006 – 2011 ம் ஆண்டு அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி,  செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதுபோல, அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி மீதும் கருப்புபணம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கவுதமசிகாமணியின் சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில்,  ஜூலை 17ந்தேதி அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகளி, அமைச்சர் பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரம் இல்லங்கள், அவருக்கு தொடர்புடைய பல மேற்பட்ட இடங்களில்  சோதனை நடத்தினர். அத்துடன் சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்த அமைச்சர் பொன்முடி அவரது மகனிடமும்  13 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நேற்று மாலையும் 6மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து நள்ளிரவு வீடு திரும்பினர்.

இந்த நிலையில், இன்று காலை, அமைச்சர் பொன்முடி,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.  சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.