டில்லி

முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானா டில்லி காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 1984 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா சிபிஐ சிறப்பு இயக்குநராகப் பணி புரிந்தவர் ஆவார், இவர் தனது பணியின்போது  லாலு பிரசாத் யாதவ் குறித்த மாட்டுத் தீவன ஊழல் வழக்கை திறம்பட விசாரித்து லாலுவுக்குச் சிறை தண்டனைப் பெற்று தந்தார்.

ராகேஷ் அஸ்தானாவுக்கும் அப்போதைய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வந்தது.   ஒருவர் மீது ஒருவர் இருவரும் தொடர்ந்து ஊழல் புகார்களைத் தெரிவித்து வந்தனர்.  மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது.  இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அலோக் வர்மா மீண்டும் பதவிக்கு வந்தார்.

மத்திய அரசு அவரை தீயணைப்புத் துறைக்குப் பணி மாற்றம் செய்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.   அதன் பிறகு மத்திய அரசு ராகேஷ் அஸ்தானாவை எல்லைப் பாதுகாப்புப்படை இயக்குநர் ஜெனரலாக பணி மாற்றம் செய்தது.   இம்மாதம் 31 ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற இருந்தார்.

இந்நிலையில் அவர் டில்லி காவல்துறை ஆணையராக மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  நேற்று வெளியான இந்த உத்தரவில் அவர் உடனடியாக பொறுப்பு ஏற்றுக் கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.