இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாரிஸ் சென்றுள்ள மோடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் கலவரம், வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்களை அடுத்து உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டித்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நரேந்திர மோடியின் “தேசியம் குறித்த பேச்சு வெற்று கூச்சல்” என்று வர்ணித்துள்ளது.

மனித உரிமை மீறல் புகார்கள் மற்றும் தரவுகளின்படி நாட்டில் 14% மக்கள்தொகை கொண்ட முஸ்லிம்கள், பெரும்பாலான அடக்குமுறையை அனுபவித்துள்ளனர், மேலும் கிறிஸ்தவர்களும் (2% மக்கள்) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் வல்லரசுகளிடையே நடைபெற்று வரும் அதிகார மற்றும் பொருளாதார போட்டியை சமன்செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தை விட மூன்று மடங்கு அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டின் உதவி மேற்கத்திய நாடுகளுக்கு தேவைப்படுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளில் வழங்கப்படும் கௌரவத்தை இந்து தேசியவாத கொள்கையுடன் எதேச்சதிகார தோரணையுடன் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த அங்கீகாரமாக விளம்பரப்படுத்தி வருகிறது.

2002 ம் ஆண்டு கோத்ரா கலவரத்தில் முஸ்லீம்கள் பெருமளவு கொல்லப்பட்டதை அடுத்து அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இந்தியாவில் எல்லாம் நல்லபடியாக நடப்பதாகக் காட்டிக் கொள்ளலாம்.

எனினும் இன்று ஐரோப்பிய பாராளுமன்றம் உண்மைகளை நினைவு கூர்ந்து இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகிறது.

மோடி அரசால் திணிக்கப்பட்ட இந்து தேசியவாதத்தால் ஒவ்வொரு நாளும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மற்றும் அவதியுறும் அனைவருக்குக்காகவும் இந்தச் சூழ்நிலையில் மௌனமாக இருப்பது அவமானமாக இருந்திருக்கும் என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.