பாரிஸ்: யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அந்த நாட்டு  அணிக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது. ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால் போட்டித் தொடரிலிருந்து ரஷ்யா தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்சில் யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ரஷ்யா – இங்கிலாந்து இடையிலான போட்டி கடந்த சனிக்கிழமை மார்செல் நகரில் நடந்தது. அப்போது இருநாட்டு ரசிகர்களிடையே பெரும் வன்முறை வெடித்தது.  பரஸ்பரம் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மைதானத்திற்கு வெளியிலும் மோதல் தொடர்ந்ததால், பெரும் வன்முறையாக மாறியது.
eur0-2016-fans-clash-14-1465908087
இதற்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்தது. சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, வன்முறை குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையின் இறுதியில் ரஷ்ய கால்பந்து அணிக்கு 1 லட்சத்து 69 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் ரகளை,  இன ரீதியான தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், பட்டாசு வெடித்தல் போன்றவற்றுக்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனியும் ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டால் போட்டித் தொடரை விட்டு ரஷ்ய அணி நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அணிக்கு இன்னும் இரு சுற்றுப் போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.