ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று  மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாக்கு களை செலுத்தினர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி அமைப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியுரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி செய்து வருகிறார். ஏற்கனவே மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், இன்று   அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மாதிரி வாக்குப்பதிவில், பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்  முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளுடன் வாக்குகள் பதியப்பட்டு சரி பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.

தேர்தலுக்கு 500 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில் 5% இயந்திரங்கள் மாதிரி வாக்கு பதிவு பயன்படுத்தப்படுகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இந்த வாக்கு பதிவு நடைபெறுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி உன்னி, “வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன”  என்று கூறினார்.