சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த காலக்கட்டமான 2016-21ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தலைமைச் செயலர், நெடுஞ்சாலைதுறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. முறைகேடான இந்த டெண்டர் மூலம் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், அறப்போர் இயக்கம், தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாகவும், மான நஷ்ட ஈடாக 1கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,”வழக்கு குறித்து அறப்போர் இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு” விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

வழக்கின் விசாரணையின்போது, தன்மீதான அறப்போர் இயக்கத்தின் புகாருக்கு இடைக்கால தடை விதிக்கக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், அறப்போர் இயக்கத்தின் தகவல்கள் அனைத்தும் வெளியாகி விட்டதால், தடை விதிக்க அவசியமில்லை என கூறிய நீதிபதி, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டால் அதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறித்தி வழக்கை ஒத்தி வைத்தார்.