சென்னை: இந்த ஆண்டு இறுதியில், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்து 2 மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நிகழ்ச்சியின்போது,   நகரங்களில் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை திறந்த வைத்தார்.

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சார்பில் சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்ற கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் மூன்றாவது பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ.5இலட்சம் வீதம், மொத்தம் ரூ.1.55 கோடிக்கான காசோலைகளை மானியமாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதல்வர்,  “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14ஆம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான புத்தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது.நான் முதல்வன் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியவர், நடப்பாண்டு இறுதியில், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்து  2மிகப்பெரிய மாநாடுகள் நடத்த  திட்டமிட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தொழில் காப்பகங்களின் திறன் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மாநிலத்தில் இயங்கும் Incubator நிறுவனங்களுக்கான தரவரிசை வழிமுறை திட்ட வரைவினை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தொடர்ந்து, மூன்றாம் நிலை நகரங்களில் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை திறந்து வைத்தார்.

அதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இயங்கும் தொழில் காப்பகங்கள், தொழில் காப்பகங்களின் ஆதரவுபெற்று புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.