திருச்சி: தமிழ்நாட்டில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில்,  காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய பரமத்திவேலுர் பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நாளை ஆடிப்பெருக்கு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புதுமணத் தம்பதிகள்,  சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது.

ஆனால் இந்த ஆண்டு,  காவிரியில் அதிகரித்து வரும் தண்ணீர் காரணமாக,  மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப் படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால்,  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறும்படி அறிவுறத்தி உள்ள மாவட்ட நிர்வாகம்,  பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதற்கு தடை விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, அரசம்பாளையம், ஜேடர் பாளையம் தடுப்பணை, ஜேடர்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிப்பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல் பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர் மற்றும் பாலப்பட்டி வரையிலான காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், முளைப்பாரி விடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பாக தண்டோரா மூலமும் மற்றும் ஒலிபெருக்கி மூலமும், எச்சரிக்கை பலகைகள் அமைத்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி,கலையரசன், காவல் ஆய்வாளர் வீரம்மாள் உள்ளிட்ட போலீசார் காவிரி ஆற்றின் நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையில் சுமங்கலி பெண்கள்  புதிய தாலி அணியும் வழக்கம் உள்ள நிலையில், அதற்க தடை விதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.