சென்னை: வரி முறைகேடு தொடர்பாக நடிகர் சூர்யாவின் உறவினர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, உள்பட பல திரைப்பட துறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரிமுறைகேடு மற்றும் கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தி சினிமா எடுக்கப்பட்டதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் அவருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை 5மணி முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து மேலும் பல குழுவினர், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு,  சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் வேலூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் மற்றும் நடிகர் சூர்யாவின் உறவினர்களான எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கலைப்புலி எஸ்.தாணு சொந்தமான இடங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தாணுவின் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல மற்றொரு குழுவினர் சூர்யாவின் உறவினர்களான  எஸ்.ஆர்.பிரபு – ஞானவேல் ராஜாவின்  சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் எஸ் பிலிம் உரிமையாளரான சீனிவாசன் என்பவரது அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வேலூர் அண்ணாசாலையில் உள்ள சீனிவாசனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சீனிவாசன், வட ஆற்காடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டு, திரையுலகினரிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…