சென்னை: திமுக. எம்எல்ஏ கே.பி. சங்கர் மீது காவல்நிலையத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.பி.சங்கர். இவர், திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை தனது ஆதரவாளருடன் சேர்ந்து தாக்கியதுடன், சாலை பணிகளை அமைக்க வந்த 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுத்திட கோரிக்கை வலுத்தது.
இப்பிரச்சினை விஷ்வரூபம் எடுத்த நிலையில், ,திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் கே.பி.சங்கர் தாக்குதலுக்குள்ளான மாநகராட்சி பொறியாளரிடம் மன்னிப்பு கோரியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், மாநகராட்சி பொறியாளர் தாக்கப்பட்ட விவகாரம், மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல அமைப்புகள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் அதிருப்தியை தெரிவித்ததுடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதுபோல காண்டிராக்டர்கள் தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தன் மீதான குற்றசாட்டு குறித்து கே.பி.சங்கர் திமுக தலைமையிடம் நேற்று விளக்கமளித்தார். மேலும் எதிர்க்கட்சிகளும் திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியிறுத்தி வந்ததுடன், டிவிட்டரிலும் அரெஸ்ட் கே.பி.சங்கர் என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்கானது.
இதையடுத்து, மாநகராட்சி பொறியாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக, திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் காவல்துறையினர் கே.பி.சங்கரை கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக எம்எல்ஏ மீதான புகார், கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், வாக்கு வங்கியிலும் கைவைக்கும் என்பதால், அதை சரிகட்ட கே.பி.சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை பச்சைக்கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சிப் பொறுப்பில் இருந்து திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்கள்…