சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சபாநாயகர் அப்பாவு. இவர்மீது நிலஅபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.  அவரது தொகுதிக்குட்பட்ட  பெருங்குடி கிராமத்தில் தாமோதரன் என்பவருக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோரின்  மூலம் அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், மூகாந்திரம் இருந்ததால், அப்பாவு மீது வழக்கு பதிவு செய்ய திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சபாநாயகர் அப்பாவு,  சுப்பையா , சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டனர். இதையடுத்து,  பாதிக்கப்பட்ட தாமோதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு புகார் வழக்கில் இதுவரைக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அப்பாவு வழக்கின் தற்போதைய  நிலை என்ன என்று கேள்வி எழுப்பியதுடன் இது தொடர்பாக இரு வாரங்களில் காவல்துறை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.