சென்னை: மாநகராட்சி பொறியாளரை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆட்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்  திமுக அரசை வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து அரசு அலுவலர்களையும், காவல் துறையினரையும் மிரட்டும் அராஜக போக்கை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மாநகராட்சி உதவிப் பொறியாளர், ஒப்பந்ததாரரை அடித்துள்ளார். அதற்காக, அவர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி பதவி பறிப்பு என்பது கண் துடைப்பு. அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில் இதுபோன்ற அராஜகங்கள் செய்ய, ஆளும் கட்சியினர் தயங்குவர்.

அதுபோல, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ., தொழில் நிறுவனங்களை மிரட்டியுள்ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சட்டத்தை மீறி செயல்படுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், சென்னையில் ஒருவர் கூட வீடு கட்ட முடியாது. ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய முடியாது. கமிஷன் கேட்டு மிரட்டுவர்.
பொங்கல் பரிசு தொகுப்பில் 500 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. எனவேதான் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம்.  தி.மு.க., மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அ.தி.மு.க., மக்கத்தான வெற்றி பெறும். தேர்தலில் எங்களுடன் சேரும் கட்சிகளுக்கு லாபம் என்று தெரிவித்தார்.