சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்  கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நெஞ்சுவலி என கூறி அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவர்களது வாகனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதுமட்டுமில்லாமல், சென்னை கோட்டையில் உள்ள பொன்முடியின் அறையிலும் சோதனை நடத்த இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சோதனையைத் தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.  அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணி முதல் 50 பேர் கொண்ட குழு இந்த சோதனை நடத்தி வருகிறது. வி

சென்னையில் சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டருகே திமுக வழக்கறிஞர் அணியின் 25 பேர் திரண்டுள்ளனர். அமலாக்கத்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பேசிய திமுக அமைப்புச் செயலாளர் அர்.எஸ். பாரதி, ”ஜெயலலிதா காலத்தில் புனையப்பட்ட ஒரு வழக்கில் இப்போது சோதனை நடத்தப்படுவதன் நோக்கம் என்ன? பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னை கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 100-க்கு இரண்டு பேர் கூட குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசைதிருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக ஆட்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது, 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வி பெறுவது உறுதி” என பேசினார்.

அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு எதிர்க்கட்சிகள், திமுக கூட்டணி கட்சிகள்  கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மத்தியஅரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். எதிர்க்கட்சியினரை  அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. பல மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன; என்றாவது அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற சோதனைகளால்  தமிழ் மண்ணில் பாஜக தோல்வியடையும்; அமலாக்கத்துறை சோதனையால் மக்களிடையே எதிர்கட்சியினருக்கு செல்வாக்கு அதிகமாகும் என்றும்,  பாஜகவின் ஒரு அரசியல் பிரிவாக அமலாக்கத்துறை செயல்படுவதாக மக்கள் கருதுகிறார்கள் என்று குற்றம் சாட்டியதுடன், பாஜகவுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை; நேருக்கு நேர் எதிர்கொள்ள பாஜகவுக்கு திராணி இல்லை என்று கடுமையாக கண்டனத்தை  தெரிவித்தார்.

அதுபோல புதுச்சேரி மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, தனது கண்டன அறிக்கையில், எதிர்க்கட்சிகளை பழிவாங்கவே பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது.  இதற்கு திமுகவோ, மதசார்ப்பற்ற கூட்டணி கட்சிகளோ அஞ்சுவது இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு திமுக கூட்டணி கட்சிகளான  மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.   அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமலாக்க த்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. சோதனை நடத்தி திமுக மீது களங்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார். அமலாக்கத்துறை சோதனை மூலம் மக்களின் கோபத்துக்கு ஒன்றிய பாஜக அரசு ஆளாகும். விலைவாசி உயர்வு பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

இதேபோல் அமலாக்கத்துறை சோதனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்கட்சிகளை பலவீனப்படுத்துவதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. எதிர்கட்சிகளை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகள் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…