CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும் என்றும் அதில் விண்ணப்பதாரரின் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் பூசாரியிடம் இருந்து தகுதிச் சான்று பெறவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழங்கப்பட்டுள்ள 1032 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ‘தி இந்து’ நாளிதழ் நடத்திய விசாரணையில் விண்ணப்பதாரர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற விரும்பும் காரணங்களை ஒரு வெற்று தாளிலோ அல்லது 10 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாளிலோ குறிப்பிட்டு அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைச் சேர்ந்த உள்ளூர் பூசாரியிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 மார்ச் 11 முதல் அமலுக்கு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), 2019 ன் கீழ் சான்றிதழை வழங்கக்கூடிய அதிகாரத்தையோ அல்லது அமைப்பையோ அமைச்சகம் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் விண்ணப்பதாரர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற உள்ளூர் பூசாரி சான்றளிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருந்து வந்த இந்து / சீக்கிய / பௌத்த / ஜெயின் / பார்சி / கிறிஸ்தவம் உள்ளிட்ட ஆறு சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் என்று சான்றளிக்கப்பட்ட வேண்டும்.

இந்த சான்றை உள்ளூர் பூசாரி தவிர நம்பிக்கையைப் பெற்ற கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.