டெல்லி: இந்தியாவில் நடப்பாண்டில் மின்சார வாகனங்கள் விற்பனை 162 சதவிதம் உயர்ந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

பாராளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. மக்களவையின் நேற்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் மின்சார வாகனம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்க பதில் அளித்து பேசிய மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி  இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 162 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது,  மார்ச் 13ந்தேதி வரையிலான நிலவரப்படி இந்தியாவில் 10 இலட்சத்து 95 ஆயிரம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 742 பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு 40 கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒரு சார்ஜிங் நிலையத்தைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கி வருவதாகவும், அதில் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்த முயன்று வருவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மேலும் பேட்டரி மாற்றும் கொள்கைப்படி, ஒரே அளவிலான பேட்டரியைத் தயாரிக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இதைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.