நெட்டிசன்:

Saravanaprasad Balasubramanian பதிவு

த்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin gadkari) பயணித்த ஹைட்ரஜன் கார்  650 கி.மீ மைலேஜ் கிடைக்கும் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

பெட்ரோல் விலை மானாவாரியா ஏறுதுனு புலம்பாம எல்லோரும் எலெக்ட்ரிக்குக்கு மாறுங்க’ எனும் பேச்செல்லாம் நேத்தோடு போச்சு! இப்போது எலெக்ட்ரிக்குக்கு மாற்று ஹைட்ரஜன் கார்தான் என்பதுதான் ஒரே பேச்சு.

மார்ச் 30ந்தேதி அன்று , ‘‘ஹைட்ரஜன்தான் எதிர்காலத்தின் எரிபொருள்!’’ என்று பார்லிமென்ட்டுக்கு புத்தம் புதிதாய் ஒரு ஹைட்ரஜன் காரில் வந்திறங்கி மெர்சல் காட்டியுள்ளார் மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

தனது வீட்டிலிருந்து டொயோட்டா மிராய் எனும் ஹைட்ரஜன் பவர்டு காரில் பார்லிமென்ட்டுக்கு வந்திறங்கிய அவர், ‘‘தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் கார்கள்தான் இனி இந்தியாவின் எதிர்காலமாக இருக்கப் போகிறது. கிரீன் ஹைட்ரஜனை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு ஆக வேண்டிய வழிமுறைகளை இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. இறக்குமதி, வேலைவாய்ப்பு என்று ஹைட்ரஜன் உற்பத்தியில் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது!’’ என்று டொயோட்டா மிராய் காரில் இறங்கியபடி பேசினார் நிதின் கட்கரி.

ஹைபிரிட் கார் தெரியும்; பேட்டரி கார் தெரியும்; எல்பிஜி கார் தெரியும்; சிஎன்ஜி கார் தெரியும்… அதென்ன ஹைட்ரஜன் கார்?

இந்த மார்ச் மாதத்தில்தான் இந்தியாவில் தனது முதல் ஹைட்ரஜன் காராக மிராய் எனும் காரை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் லாஞ்ச் செய்தது. இதை அட்வான்ஸ்டு FCEV (Fuel Cell Electric Vecihle) என்றும் சொல்கிறார்கள். ஜீரோ எமிஷன், அதாவது சுற்றுச்சூழலில் எலெக்ட்ரிக்குக்கு அண்ணன் என்று இந்த ஹைட்ரஜன் எரிவாயுவைச் சொல்லலாம்.

டொயோட்டா மிராய் பற்றி சில லிஸ்டிக்கிள்ஸ்!

இந்த ஹைட்ரஜன் ஃப்யூல் செல் கார்கள், உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கார்கள். உலகிலேயே ஹைட்ரஜன் மூலமாக ஏற்படும் மின்சாரத்தில் ஓடும் முதன்மையான கார்களில் ஒன்றுதான் இந்த டொயோட்டா மிராய். இந்தியாவில் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என ஓடுவது இந்த டொயோட்டா மிராய் மட்டும்தான்.

மிராய் என்றால், ஜப்பானிய மொழியில் (Future) ‘எதிர்காலம்’ என்று அர்த்தம்.

பெட்ரோல் டேங்க் மாதிரி இந்த கார்களிலும் உயர் அழுத்த ஹைட்ரஜன் டேங்க் இருக்கும்.

இதில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்ப 3 – 5 நிமிடங்கள் வரைதான் ஆகும். எனவே, பெட்ரோல்/டீசல் போடுவதைவிட ஹைட்ரஜன் நிரப்புவது ரொம்ப ஈஸி.

ஒரு டேங்க் ஃபுல் பண்ணினால், இதன் சிங்கிள் ரேஞ்ச் 650 கிமீ என்கிறது டொயோட்டா. ஹைட்ரஜன் கேஸ், இதிலுள்ள ஹை ப்ரஷர் டேங்க்கில் நிரப்பப்படும்போது, அதிலுள்ள ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஃப்யூல் செல்லாக ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு, மின்சாரமாக உருவாகி, இதிலுள்ள எலெக்ட்ரிக் மோட்டாருக்கு பவராக அனுப்பும். இந்த எலெக்ட்ரிக் மோட்டார்தான் இந்த காரை இயக்குகிறது.

பெட்ரோல் / டீசல் கார்களில் எக்ஸாஸ்ட்டில் இருந்து புகை வரும். எலெக்ட்ரிக் கார் என்றால் எக்ஸாஸ்ட்டே இருக்காது. ஆனால், இது இரண்டுமே இதில் கிடையாது. IC இன்ஜின் கார்கள் மாதிரி புகையையும் அப்பாது; எலெக்ட்ரிக் கார் மாதிரி பயங்கர சைலன்ட்டாகவும் இருக்காது. இதில் உள்ள சைலன்ஸரில் இருந்து, ஏர்கூலரில் இருந்து வருவது மாதிரி தண்ணீர் வெளியே வரும். இந்தத் தண்ணீரால் சுற்றுச்சூழல் கெடாது; உடலுக்கும் தீங்கில்லை என்பதுதான் ஹைலைட்.

சுற்றுச்சூழலைப் பயமுறுத்தாது என்பதால், ஹைட்ரஜன் கார்களுக்கும் எலெக்ட்ரிக் கார்களைப்போலவே பச்சை நிறத்தில்தான் நம்பர் பிளேட் இருக்கும்.

மிராயின் எரிபொருளான கிரீன் ஹைட்ரஜனை மரங்கள், மரக்கழிவுகள், திடக்கழிவுகள், பயோகேஸ், பயோடீசல், ஹைட்ரோபவர் ஸ்டேஷன், தண்ணீர், ஜியோதெர்மல், காற்று, Tidal Power என்று சொல்லப்படும் கடற்கரை அலைகள், சோலார் போன்ற Renewable Energy மூலம் தயார் செய்யலாம்.

டொயோட்டா மிராயின் ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் காரை 2014–ல் தனது தாயகமான ஜப்பானில்தான் லாஞ்ச் செய்தது டொயோட்டா. மிராய் தற்போது ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டும்தான் விற்பனையில் இருக்கிறது.

மிராயின் செகண்ட் ஜென் மாடலை, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது டொயோட்டா. இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் அந்த ஜப்பான் டொயோட்டா மிராயில், ஃபரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் பங்க்கில் ஹைட்ரஜனை நிரப்பி வந்திறங்கி டாட்டா காட்டியிருக்கிறார் நிதின் கட்கரி.

ஏற்கெனவே தனது பார்லிமென்ட் நண்பர்களிடம் இப்படிச் சொன்னார் நிதின் கட்கரி. ‘‘எல்லோரும் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதை விட்டுவிட்டு எலெக்ட்ரிக்குக்கு மாறுங்க. 10 ரூபாய்தான் செலவழியும்!’’ என்றார்.

(ஹைட்ரஜன் கார்களின் தொடக்க விலை 37 லட்சம் ரூபாய்கள். அதுதான் minus ஆக பாக்கப்படுது)