பாஜக மாவட்டத் தலைவர்கள் தேர்தல் நாளை தொடங்க உள்ள நிலையில், டிசம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவில் கட்சி விதிகளின்படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும். கிளை கமிட்டி, மண்டல் (ஒன்றியம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி மண்டலம்) மாவட்டம், மாநிலம் மற்றும் தேசியத் தலைவர் வரை அனைத்து தலைவர் பதவிகளும் 3 ஆண்டுகளைக் கொண்டது. எனவே, பாஜக உட்கட்சித் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2015ம் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி 2018ம் ஆண்டு டிசம்பரம் மாதம் உட்கட்சித் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2019, ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையும், உட்கட்சித் தேர்தலும் தள்ளிப்போனது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஜூலை 6ம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. 3 மாதங்கள் நடந்த இந்தப் பணி முடிவடைந்ததையடுத்து, உட்கட்சித் தேர்தல் கடந்த அக்டோபரில் தொடங்கியது. கிளை கமிட்டித் தேர்தல்கள் முடிந்து, தற்போது மண்டல் தலைவர் தேர்தல்கள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலஅமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், “கிளைக் கமிட்டி, மண்டல்தலைவர் தேர்தல்கள் முடிந்த மாவட்டங்களில் மாவட்டத் தலைவர் தேர்தல் நவம்பர் 15ம் தேதி தொடங்கும். வரும் 30ம் தேதிக்குள் மாவட்டத் தலைவர் தேர்தல்களை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு டிசம்பர் 2வது வாரத்தில் மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெறும். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.