தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு, அரசு மருத்துவர் ஒருவரே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதிலிருந்து டெங்குகாய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், டெங்குவால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மதுரை விசாலாட்சபுரத்தை சேர்ந்த பிருந்தா என்ற பெண், அரசலூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராகப் பணி புரிந்து வருகிறார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரது வீட்டின் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காய்ச்சல் அதிகமான காரணத்தால், அந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து, அவருக்கு நடைபெற்ற ரத்தப் பரிசோதனையில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின், தனி வார்டில் வைத்து பிராந்தாவிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவர் பிருந்தா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்குவால் அரசு மருத்துவரே உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.