தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கோயல், நவம்பர் 21, 2022 அன்று தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார் இவரது பதவிக் காலம் 2027ம் ஆண்டு நிறைவடைவதாக இருந்தது.

மத்திய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த நவம்பர் 18, 2022 அன்று இந்திய நிர்வாகப் பணிகளில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில் அப்போது இது சர்ச்சையை ஏற்படுத்தியது..

பிப்ரவரியில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்ற பிறகு, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம் இரண்டாகக் குறைந்த நேரத்தில் அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அருண் கோயல் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.