டில்லி

தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பை உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கான உச்சவரம்பை நிர்ணயம் செய்தது.  பிறகு 2018 ஆம் ஆண்டில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் செலவு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டது.   இந்த செலவு உச்சவரம்பு அந்தந்த தொகுதி வக்காளரகள் எண்ணிக்கையைப் பொறுத்து தீர்மானம் செய்யப்படுகிறது.

பல மாநிலங்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.   மேலும் செலவினங்களும் அதிகரித்து வருகிறது.  எனவே இந்த தேர்தல் செலவு உச்சவரம்பை அதிகரிக்க கோரிக்கைகள் எழுந்தன.   இதையொட்டி சென்ற வருடம் அக்டோபரில் ஒரு குழு அமைக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்தல் செலவை 10% அதிகரிக்க  அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்குக் கோரிக்கை விடுத்தது.   அரசியல் கட்சிகளின் கருத்துக்கு இணங்க தற்போது தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கான உச்சவரம்பை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக உள்ள தொகுதிகளில் தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  இதைப் போல் ரூ.55 லட்சமாக இருந்த உச்சவரம்பு ரூ. 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  சட்டப்பேரவை தேர்தல்களில் ரூ.28 லட்சமாக இருந்த தொகுதிகளில் உச்சவரம்பு ரூ.40 லட்சமாகவும் ரூ.20 லட்சமாக இருந்த உச்சவரம்பு ரூ.28 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.