சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணத்தை வாரி இறைத்த நிலையில், அதை தடுக்க தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொள்ளவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரு சடங்கு போல நடைபெற்று முடிந்துள்ளது என விமர்சித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேர்தல் ஆணையத்தை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள தனது கட்சி அலுவலகமான பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்கள் 61 தொகுதிகளில் போட்டியிட்டனர். அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைபெற்று முடிந்த தேர்தல், தமிழ்நாடு முழுவதும் ஜனநாயகமா? பணநாயகமா? என்று கேட்கும் அளவுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. நான் போட்டியிட்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பணப் பட்டுவாடா குறித்து புகார் அளித்தும், அதுபற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏப்ரல் 23-ம் தேதி வரை ஜனநாயகத்திற்கு விரோதமாக மித மிஞ்சிய அளவில் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது.
பண பட்டுவாடாவை தேர்தலின் ஒரு அங்கம் என தேர்தல் ஆணையம் விட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பியவர், ஏப்ரல் 22ஆம் தேதி இரவு வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுத்துள்ளார்கள். இப்படி இருந்தால் ஏழை எளியவர்கள் அரசியலுக்கு வர முடியாது.
தேர்தல் என்பது பணம் உள்ளவர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டது போன்று உள்ளது. இந்த தேர்தலை, அமைதியான தேர்தல் என்று சொல்ல இயலாது.
இந்த நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். வரும் காலத்திலாவது தேர்தல் முறைகேடுகளை தடுக்க வேண்டும். இந்த தேர்தல், ஜனநாயக தேர்தல் அல்ல. தேர்தல் பறக்கும் படை போதுமானதாக இல்லை. பணப்பட்டுவாடா குறித்து தகவல் தெரிவித்தும் நடவடிக்கைகள் இல்லை. தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்ததாக தெரியவில்லை.
ஓட்டு போடுவது மட்டுமே ஜனநாயகம் கிடையாது. எவ்வாறு ஓட்டு போட்டுள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கு பணபட்டுவாடா ஒரு காரணம். வாக்காளர்களை நிர்பந்தம் செய்திருப்பார்கள்.
தவெக தலைவர் விஜய்யாலும் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கலாம். அதுமட்டுமல்ல, வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தமும் வாக்கு சதவீதம் அதிகரித்ததற்கு காரணமாகும்.
தேர்தல் ஆணையத்தை மறு சீரமைக்க வேண்டும் இல்லையென்றால் ஜனநாயகம் படுகுழியில் போகும். தேர்தல் முறையாக நடந்ததா என ஒரு சர்வதேச அமைப்பு சரிபார்க்க வேண்டும். மக்கள் பணம் வாங்கினால் எப்படி குறை சொல்ல முடியும். மக்களின் நிலை, இந்த அளவிற்கு மோசமாக உள்ளது. மக்களை அவ்வளவு வறுமையில் வைத்துள்ளார்கள். 500 ரூபாய்க்கு மண்டியிடும் அளவிற்கு மக்களை தள்ளி அவமானப்படுத்துகிறார்கள்”
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.