கேரளாவில் திருநங்கைகளுக்கு கல்வி உதவித் திட்டம்!

திருவனந்தபுரம்

ள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய திருநங்கைகள் படிப்பை தொடர கேரள அரசு முன்வந்துள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து கல்வி பயில பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திருநங்கைகள்  தொடர்ந்து  10 மற்றும் 12ம் வகுப்பு வரை கல்வி பயில,கேரள மாநில அரசு எழுத்தறிவு இயக்கம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

திருநங்கைகளின் நலனுக்காக கேரளாவில் SGMF (SEXUAL AND GENDER MINORITY FEDERATION) என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்துக்காக மார்ச் மாதம் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்ட திருநங்கைகள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை மே மாதம் 31ம் தேதியன்று இயக்கத்திடம் அளித்தது.

இந்த கணக்கெடுப்பின் படி, கேரளாவில் 4000 திருநங்கைகள் இருப்பதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆனால், கேரளா முழுவதும் சுமார்  25000 திருநங்கைகளுக்கு மேல் இருப்பதாக வும்,  ஆனால் கணக்கெடுப்பின் போது பல பெற்றோர்கள் தங்கள் வீட்டில் திருநங்கைகள் இருந்தாலும் அதை வெளி நபர்களுக்கு தெரிவிப்பதில்லை எனவும் இந்நிறுவனத்தின் மாநிலத்தலைவர் ஸ்ரீகுட்டி கூறியுள்ளார்.

இவர்களில்பெரும்பாலோர்  நான்காம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்குள்ளேயே படிப்பை நிறுத்தி விடுவதால், அவர்களுக்கு மேற்படிப்பு கற்பிப்பது அவசியம் என்றும்  கூறி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, கேரளா எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் திருநங்கைகளுக்கு தனி வகுப்பாக தற்போது, 10 மற்றும் 11ம் வகுப்புக்கு சேர்க்கையும், நான்கு மற்றும் ஏழாம் வகுப்பின் சேர்க்கையும் தொடங்க உள்ளது.

10 மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கை, நடப்பு கல்வியாண்டிலேயே துவங்கப்படுவதால் மற்ற மாண வர்களுடன் இவர்களும் அதே நேரத்தில் தேர்வு எழுத ஏதுவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான வகுப்புகள்ஜு ன் 5ம் தேதி முதல்  ஆரம்பிக்கின்றன என்றும்,   ஒவ்வொரு மாவட்டத்திலும் 15க்கு மேற்பட்ட திருநங்கையர் இருந்தால் அவர்களுக்காக தனி வகுப்பு நடத்தப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு கொல்லம், கோழிக்கோடு, மல்லப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களிலும்,  11ம் வகுப்பு கொல்லம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களிலும் தொடங்கப் பட உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.

திருநங்கைகள் கல்வித்திட்டத்தில் சேர்ந்து கல்வி பயின்று,  தேர்வு பெறுபவர்கள் ரெகுலர் கல்வித்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இணையாக  அரசு வேலை வாய்ப்பு போட்டியிட முடியும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளா மாநில எழுத்தறிவு இயக்கத்தினால் 1991ம் வருடம் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


English Summary
Educational Assistance Program for Transgender in Kerala