சென்னை: அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை என அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10மணிக்கு தொடங்கியது. அண்ணா பல்கலை.யின் கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பிரதமர் பங்கேற்றுள்ளார்.  நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்தியஅமைச்சர் எல்.முருகன்  பங்கேற்றுள்ளனர். விழாவில்  பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

முன்னதாக விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி உள்பட தலைவர்கள்  தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வரவேற்று பேசினார். அப்போது, நான் முதல்வன் திட்டம் மூலமாக பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் செய்திருக்கிறார் என்று பேசினார்.

அதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தற்காக பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய உயர் கல்வித் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசிய உயர் கல்விக்கான தரவரிசைப் பட்டியலில், பெருவாரியாக இடம்பெற்றுள்ளவை தமிழக கல்வி நிறுவனங்கள்.

பட்டங்கள் என்பது வேலைவாயப்புக்காக மட்டும் இல்லை. அது அறிவாற்றலை மேம்படுத்துவதற்கானது என்பதை மறக்கக் கூடாது. அறிவாற்றல்தான் அனைத்திலும் உயர்வானது என்பதை உணருங்கள். தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். கல்வி என்பதுதான் யாராலும் திருட முடியாத, பறிக்க முடியாத சொத்து. எனவேதான் படிப்பிற்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால்தான் திராவிட மாடல் தமிழக அரசானது, கல்விக் கண்ணை திறப்பதையே பெரும்பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முழுமுதற் கொள்கையான சமூகநீதியின் அடிப்படையே கல்விதான்.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் கல்லூரி உயர் கல்வி, அனைவருக்கும் கல்லூரி ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. உயர் கல்வியை மேம்படுத்த ஊக்கத் தொகை, இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நாட்டைச் செழிக்கச் செய்யக்கூடிய வல்லுனர்கள் மாணவர்கள் தான் என்று அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை ஆகும். மேலும் தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு முழு வீடியோ காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://twitter.com/i/broadcasts/1ZkJzbjrdlgJv