சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில், இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதில், அதிமுகவின் மதுரை எழுச்சி மாநாட்டின் இலட்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று காலை கூடியது.  கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தல், தேர்தல் கூட்டணி, நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னதாக கூட்டம் தொடங்கியதும் ஆகஸ்டு 20ந்தேதி மதுரை நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநாட்டுக்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். தொடர்ந்து கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே  கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அதிமுக சார்பில் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .அவர் பொறுப்பேற்றபிறகு  நடக்கும் அதிமுகவின் முதல் மாநாடு இது என்பதால் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமான மாநாடாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் மதுரையில் மாநாடு நடத்தி தனது ஆதரவாளர்களை திரட்டி, தனது வலிமையை வெளிக்காட்டிய நிலையில், எடப்பாடி தரப்பில் அதே மதுரையில் தனது வலிமையை பிரதிபலிக்கும் வகையில் மாநாடு நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.