சென்னை,
டப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக  அரசு ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ அணி சார்பில் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கலீல்ரகுமான் செய்திருந்தார்.

அதேபோல்ர,  மத்திய சென்னை மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் ஏழை விவசாயிக்கு கறவை மாடு- கன்று வழங்கப்பட்டது.

வட சென்னை மாவட்டம், எஸ்.சி. துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. 47 காங்கிரஸ் தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதச்சார்புடைய, வகுப்பு வாத அரசியலை எதிர்த்து மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் ராகுல். அதேபோல்,  குற்றவாளிகள் யாரும்  பதவிகளில் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கியவரும் அவர் தான் என்று கூறினார்.

மேலும், சட்டசபையில் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா, எம்.எல்.ஏ.க்கள் பண பேரம் பற்றி எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது கண்டத்துக்குரியது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்  அரசு மீது கவர்னிடம் புகார் செய்துள்ளன. அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

பாரதியஜனதா கட்சி,  அ.தி.மு.க.வை உடைத்து தனது கட்டுப்பாட்டுக்குள்  வைத்துள்ளது என்று குற்றம்சாட்டிய திருநாவுக்கரசர்,  இப்போது இந்த ஆட்சியை காப்பாற்ற பா.ஜனதாவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தல் கமிஷன் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து வழக்கு பதிய சொல்லி இருப்பதால்,  எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். முதலில் அவர் அரசியலுக்கு வந்து கொள்கைகள், தனித்து நிற்கிறாரா? என்பதை அறிந்த பிறகே எதுவும் சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.