நான்கு நாளில் புழல் ஏரி காலி! பஞ்ச அபாயத்தில் சென்னை!

சென்னை:

சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கும் நீராதாரமாக இருந்து வருவது மொத்தம் 4 ஏரிகள்.  ஆனால் தற்போது 3 ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில், மீதமுள்ள புழல் ஏரியும் வேகமாக வறண்டு வருகிறது. இதனால் சென்னைக்கு கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட உள்ளது.

குடிநீர் வாரியம் இந்த வறட்சியைச் சமாளிக்க நெய்வேலியில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளது.  சென்னை மக்களுக்கு தினமும் சுமார் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.

இந்த குடிநீர் தேவைக்கு வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவை இருந்தாலும் முக்கியமாக பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள்  தான் பூர்த்தி செய்து வந்தன.

சென்ற ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உள்ள நீர் அளவு கிடுகிடுவென குறைந்தது. கடும் வெயிலால் ஏற்பட்ட வறட்சி காரணமாக வீராணம் ஏரி வறண்டது. இதனால் அங்கிருந்து வரும் தண்ணீர் வரத்து சுத்தமாக நின்று போனது.

கிருஷ்ணா கால்வாய் மூலம் கிடைத்த தண்ணீரும் அடுத்தப்படியாக நின்று போனது. இதன் காரணமாக சென்னையின் குடிநீர் தேவைக்கு 4 ஏரிகளையும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

தற்போது புழல் ஏரியில் இருந்து தினமும் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இன்னும் 4 நாட்களில் புழல் ஏரியும் வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், ” சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்  முழுவதும் வறண்ட காரணத்தால் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நெம்மேலி, காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து தினமும் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரும் வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் போதாத நிலையே உள்ளது.

மாங்காடு பகுதியில் உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குடிநீராக வழங்கப்படுகின்றதென்றாலும் அதுவும் விரைவில் குறையும் வாய்ப்பு உள்ளது.

போரூர் ஏரி தண்ணீரையும் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.  சென்னையை சுற்றியுள்ள ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு கொடுத்து வருகிறோம்.

முன்பு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சென்னைக்கு வழங்கப்பட்டது. ஆனா; இப்போது வெறும் 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது” என்கிறார்கள்.

 

 


English Summary
Puzhal water will available for just 4 days : fate of chennai