சென்னை

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின்வாரியத்தில் முறைகேடு எனக் கூறுவதற்கு 24 மணி நேரத்தில் ஆதாரம் அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் தமிழகத்தில்  ஒரு யூனிட் விலையை உற்பத்தி விலையை விட 4 மடங்குக்கும் அதிக விலை கொடுத்து அதாவது ரூ.20க்கு வாங்க தயாராக உள்ளதாகவும் இதனால் ஏற்கனவே கடனில் முழுகி உள்ள மின் வாரியம் மேலும் கடனில் தள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.   

மேலும் அவர் இதை ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் வாங்கி அதை அவர் மின்வாரியத்துக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் இதனால் அந்த ஆளும் கட்சிக்கு ரூ. 5000 கோடி வரை ஆதாயம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.  தவிர தம்மிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் இது போல நடந்தால் அந்த ஆதாரங்களை உடனடியாக வெளியிடத் தாம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம், ”தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்கு துறை தயாராக இருக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.  பல மாநிலங்களில்  நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. அந்த மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மின்தடை இல்லாத வகையில் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு நான் வரத் தயார். அண்ணாமலை தன்னிடம் உள்ள ஆதாரங்களை ௨௪ மணி நேரத்தில் வெளியிட வேண்டும், இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சிலர் தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். அவர்களிடம் உண்மையாகவே  ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடுக்கட்டும்.   நாங்கள் அதையும் சந்திக்கத் தயாராக உள்ளோம்” எனக் கூறி உள்ளார்.